Tuesday, September 11, 2018



இமானுவேல் சேகரன்   

 ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவரான தியாகி இம்மானுவேல் சேகரன், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூருக்கு அருகில் உள்ள செல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை ஆசிரியர் வேதநாயகம், தாயார் ஞானசுந்தரி. இவர்களது மூத்த மகனாக 9-10-1924ம் ஆண்டு பிறந்தார் இம்மானுவேல் சேகரன். அடக்கு முறைக்குட்பட்ட சமூகத்தில் உதித்த காரணத்தினால் சிறுவயதிலேயே இன விடுதலை வேள்வியால் வளர்ந்த இவர் இந்திய தேசத்தை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்கள் மீது, கோபமும், கொந்தளிப்பும் கொண்டார்.. அதன் எதிரொலியாக 1942ம் ஆண்டு தனது தந்தை வேதநாயகத்தோடு விடுதலை வேள்வி வெறியோடும், வெள்ளையனே வெளியேறு போராட்ட களத்தில் குதித்தார். இம்மானுவேல் சேகரன் எதிர்காலத்தில் தேசம் திரும்பி பார்க்கும் தலைவராக திருப்பு முனையை ஏற்படுத்தப்போகும் களம் அது என்று அறியவில்லை. இருந்தும் இந்திய தேசத்திற்காக களத்தில் குதித்தவர் 3 மாதம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு சோதனைகளை சந்தித்தார். நாட்கள் உருண்டோடின. அடக்குமுறை சமூகத்தின் அவலத்தை அகற்றிட வேண்டும் என்ற லட்சிய வெறியோடு வலம் வந்தார். தனது 19வது வயதில் அருப்புக்கோட்டையில் தலித்துக்களுக்கு மட்டும் உருவாக்கப்பட்ட இரட்டை டம்பளர் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தமுறையை சமூகத்திலிருந்து அகற்றிட மாநாடு நடத்தி தனது சமூக மக்களிடம் மட்டுமின்றி பிற சமூக மக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். 1954ம் ஆண்டு தீண்டாமை ஒழிக்க வலியுறுத்தி மாநாடு ஒன்றினையும் நடத்திய அவர் தனது சமுதாய மக்கள் மத்தியில் அன்றைய காலகட்டத்தில் மாபெரும் சக்தியாக வலம் வரத்தொடங்கினார். இம்மானுவேல் சேகரனின் வளர்ச்சியும், அம்மக்களிடம் ஏற்பட்ட எழுச்சியும் பிற சமூகத்தை லேசாக உசுப்பிப் பார்க்க தொடங்கியது. சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடியவர் தியாகி இமானுவேல் சேகரன். தனது கல்லூரி வாழ்க்கையில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர். இந்திய சுதந்திரத்தை நம்பி தன் வாலிபப் பருவ கனவுகளுடன் இந்திய ராணுவத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தேசத்திற்கான தன் சேவையை வழங்கச் சென்றார். 1950-ல் ராணுவத்திலிருந்து விடுப்பில் வந்த இவருக்கு தனது கற்பனையும் நிகழ்கால வாழ்க்கைமுறையும் வேறு வேறாக இருப்பது தெரிகிறது. இவரின் சமூக மக்களின் மீதான இன்னொரு சாதியினரின் ஒடுக்குமுறைகளைக் கண்டு தனது ராணுவ வேலையைத் துறந்தார். "ஒடுக்கப்பட்டோர்களின் விடுதலை இயக்கம்" என்ற அமைப்பைத் தொடங்கினார். 1957ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆதிக்க சக்திகளிடமிருந்து தனது சமூகம் வெற்றிபெற கடுமையாக உழைத்து தனது பலத்தை நிரூபித்தார். 1-9-1957 அன்று காடமங்கலம் கிராமத்தில் மூதாட்டி ஒருவர் உடல் நலக்குறைவால் இறக்கிறார். இடுகாட்டுக்கு கொண்டு செல்ல வேண்டுமெனில் சில தடைகளால் முக்கிய பாதைக்கு எதிர்ப்பு ஏற்படுகிறது. பெருமாள் பீட்டர் என்பவரும், இம்மானுவேல் சேகரனு்ம் கமுதி காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர். மூதாட்டி உடல் சுமூகமாய் இடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது. இதில் இருந்து இமானுவேல் சேகரனுக்கும், எதிர்ப்பு உள்ளூரில் ஏற்படுகிறது. அதன் விளைவாக 5-9-57ல் லாவி என்ற கிராமத்திலுள்ள குடிநீர் கிணறு அசுத்தம் செய்யப்படுகிறது. பிரச்சனை உருவாகிறது. பணிக்கர் என்ற மாவட்ட ஆட்சியர் தலைமையில் 10.9-57ல் சமாதானக் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் ஆதிக்க ஜாதி தலைவர்களுக்கு சரிசமமாக, கால்மேல் கால் போட்டு (கபாலியில் ரஜினி பேசும் வசனம் இந்த சம்பவத்தை மையமாக வைத்தது) தமது தரப்பு வாதங்களை முன்வைத்தார் இமானுவேல் சேகரன். அதிகாரிகள் சமரசத்தால் அம்மக்களிடையே உடன்படிக்கையில் அரை மனதோடு கையொழுத்து இடப்படுகிறது. யாரும் எதிர்பாராத கொடுமையாக, எதிர்காலத்தையே புரட்டி போடும்ஒரு சம்பவம் 11ம் தேதி அரங்கேறுகிறது. இம்மானுவேல் சேகரன் அவரது தந்தையின் நண்பர் வீட்டில் தங்கி விட்டு மாலையில் பரமக்குடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விட்டு இரவு 9 மணி அளவில் வீடு நோக்கி திரும்புகிறார். அப்போது திடீரென 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரை சராமரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்புகிறது. விஷயம் காட்டு தீ போல பல்வேறு பகுதிகளில் பரவுகிறது. 12-9-1957 அன்று அவரது உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது. 33 வயது இளைஞனின் எழுச்சி பயணம் ஜாதிக் கும்பலால் தடுக்கப்பட்டு மயானத்திற்குச் செல்லும் பாதை துண்டிக்கப்பட்டதால் 13-9-57ல் ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது. இருதரப்பும் மோதியதில் 85 பேர் பலியாகினர். தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு தினத்தை தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் குரு பூஜையாக ஆண்டுதோறும் கொண்டாடி  
வருகின்றனர்.



No comments:

Post a Comment

IMMANUEL SEKARAN 9 OCTOBER 1924 - 11 SEPTEMBER 1957